தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்?

பெயர் என்பது ஒரு மனிதனின் தொடக்கம் முதல் வாழ்வின் கடைசி நிமிடம் வரை பலரால் அழைக்க படுவது. உடலுக்கு உயிர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவு பெயரும் ஒரு மனிதனின் வாழ்வில் மிக மிக முக்கியமான ஒன்று.


இன்றைய காலகட்டத்தில் தமிழில் பெயர் வைக்காமல் வடமொழியில் பெயர் வைத்து மகிழ்கின்றனர். இப்படி வைப்பதற்கு பல காரணங்கலையும் கூறுகின்றனர். முதல் எழுத்து , எண்கணிப்பு முறை என்று பல காரணங்களை சொல்கின்றனர். அவர்களிடம் அந்த வடமொழி பெயருக்கு அர்த்தம் கேட்டால் கூட பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை.

பெயர் என்பது ஒரு குலத்தின் ஒரு இனத்தின் அடையாளமாக காணப்படுகிறது. ஒவ்வொரு மொழியினரும் அவரவர் மொழியில் பெயரை வைத்துக்கொள்கின்றனர்.  ஆனால் தமிழர்கள் மட்டும் பிற மொழியுடன் கலந்து பெயர் வைக்கின்றனர்.

உலக மொழிகள் பலவற்றுக்கு எழுத்து, சொல், யாப்பு, அணி ஆகியன உண்டு ஆனால் தமிழ் மொழிக்கு மட்டும்தான் பொருளுக்கு இலக்கணம் உண்டு.  உலகில் மற்ற மொழிகளெல்லாம் வாயினால் பேசப்பெற்றுச் செவிக்குக் கருத்தை உணர்த்த வல்லவை; ஆனால் தமிழ் மொழி இதயத்தால் பேசப்பெற்று இதயத்தால் உணரவைக்கும் மொழியாகும்.

நம் மொழியில் இல்லாத அழகிய பெயர்களா?? யாழினி, குழலி, கயல், கரிகாலன், புகழ், இலக்கியா இன்னும் எவ்வளவோ பெயர்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.

வடமொழியின் அர்த்தம் தெரியாமல் பெயர் வைப்பதை தவிர்த்துவிட்டு அழகிய தமிழ் மொழியில் பெயர் வைத்து தமிழ் மொழியை நாம் பேணி காப்போம் என்று உறுதி மொழி ஏற்போம்.

Comments